“பணிச்சுமையால் என் மகள் உயிரிழந்துவிட்டாள்”! மனம் உருக வைக்கும் தாயின் கடிதம்!
அன்னா செபாஸ்டியன், பட்டய கணக்காளராக 4 மாதம் எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
புனே : புனேவில் உள்ள பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) என்ற நிறுவனத்தில் 26 வயது உடைய அன்னா செபாஸ்டியன் பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது அந்நிறுவனத்தில் ஏற்பட்ட பணிச்சுமையால் உயிரிழந்ததாக அவரது தாய் கூறியுள்ளார்.
கடந்த நான்கு மாதங்களாக பட்டய கணக்காளராக (Chartered Accountant) EY நிறுவனத்தில் அன்னா பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த நிறுவனம் மூலம் ஏற்பட்ட பணிச்சுமை காரணமாக தற்போது அவர் உயிரிழந்து இருக்கிறார். அதனை தொடர்ந்து, “என் மகள் உயிரிழந்ததற்கு காரணம் பணிச்சுமை தான்” என அவரது தாயார் தயார் அனிதா, EY இந்திய தலைவர் ராஜீவ் மேமானிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தாயாரின் கடிதம் :
அந்த கடிதத்தில், “என் மகள் பள்ளி, கல்லூரியில் நன்றாகவே படித்து, சிஏ (CA) தேர்விலும் டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றாள். இதுதான் அவளது முதல் வெற்றி அதன்பிறகு சிஏ துறையில் ஆர்வத்துடன் அவளது பணியை தொடங்கினார். இதற்காக ஓய்வின்றி உழைத்தாள். அவளுக்கென கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடித்தாள்.
இருந்தாலும் நீண்ட நேரம் பணியாற்றியது அவளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை கொடுத்தது. கடந்த மார்ச் மாதம் இந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவள் தற்போது ஜூலை மாதம் உயிரிழந்துவிட்டாள். வேலைக்காக அவளது உயிரையே கொடுப்பாள் என என் குழந்தை அப்போது அறியவில்லை.
குறிப்பாக அவளது ஷிப்ட் நேரம் முடிந்தாலும் கூட அவளது மேனேஜர் சில பணிகளை கொடுத்து வந்துள்ளார். அதனால் என் மகள் ஓவர் டைமாக பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், வார விடுமுறை நாட்களிலும் பணியாற்ற வேண்டி இருந்தது.
நாங்கள் இந்த வேலையை விடுமாறு அவளிடம் தெரிவித்தோம். ஆனால், கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவள் கண்ணை மறைத்து விட்டது. இப்போது அவளே இல்லை. அவளது இறுதிச் சடங்கிற்கு கூட அவள் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து யாரும் வரவில்லை.
எனது மகளைப் போல இந்த நிறுவனத்தில் பணியாற்றும் வேறு எந்த ஊழியர்களும் உயிரிழந்து விடக் கூடாது என்பதற்காக தான் இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன். எங்களைப் போன்ற எந்தவொரு ஊழியரின் குடும்பமும் பாதிக்கப்படக் கூடாது”, என அன்னாவின் தாயாரான அனிதா அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.
ராஜீவ் சந்திரசேகர் பதிவு :
இந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சாரான ராஜீவ் சந்திரசேகர் அவரது எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “இந்த சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. இந்த பணியின் சூழலை பற்றியும், அன்னா செபாஸ்டியனுக்கு ஏற்பட்ட இந்த துயரசம்பவத்திற்கு பின்னால் இருக்கும் இந்த குற்றசாட்டுகளை விசாரிக்க மன்சுக் மாண்டவியாவைக்கும் மற்றும் ஷோபா கரந்த்லாஜேவைக்கும் கோரிக்கை வைத்து கொள்கிறேன்”, என்று பதிவிட்டிருந்தார்.
ஷோபா கரந்த்லாஜே பதிவு :
இதற்கு மக்களவை உறுப்பினரான ஷோபா கரந்த்லாஜே பதிலளித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “அன்னை செபாஸ்டியன் பேராயிலின் துயரமான இழப்பிற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கான நீதியை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்”, என பதிவிட்டிருந்தார்.