இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!
சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடைபெறுகிறது. அவர்கள் வீடுகள், தொழில்கள் புல்டோசர்கள் கொண்டு தகர்க்கப்படுகிறது என மக்களவையில் திமுக எம்பி கனிமொழி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட் உரை மீதான தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ள நிலையில், திமுக சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
அவர் பேசுகையில், ” மத்திய அரசும் மாநில அரசும் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் உத்திர பிரதேச மகா கும்பமேளா நிகழ்வில் மக்கள் பங்கேற்றனர். ஆனால், மக்களை அரசு பாதுகாக்கவில்லை. சர்தார் வல்லபாய் படேல் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்தார். அவருடைய மிக உயரமான சிலையை நீங்கள் திறந்துள்ளீர்கள் அதற்கு பாராட்டுக்கள். ஆனால், ரூ.3 ஆயிரம் கோடி செலவு செய்து அவருடைய சிலையை வடிவமைப்பதை விட அவருடைய கொள்கைகளை கொண்டு நாட்டை வழிநடத்துங்கள். சிறுபான்மையினர் நமது நாட்டில் பாதுகாப்பு இல்லாததை போல உணர்கின்றனர். CAA, தலாக் ரத்து, வக்ஃபு வாரிய திருத்த சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவை அவர்களை பயமுறுத்துகின்றன.
இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக காஷ்மீர் யூனியன் பிரதேசம் இருந்தது. அங்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டு 100க்கும் மேற்பட்ட காஷ்மீர் அரசியல்வாதிகள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது சிறுபான்மையினர் மீதான தாக்குதல். நாட்டில் 14% இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். 80% பேர் இந்துக்கள் வசிக்கின்றனர். குறைந்தபட்சம் அவர்கள் (சிறுபான்மையினர்) தனியுரிமையிலாவது சுதந்த்திரம் கொடுங்கள்.
சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடைபெறுகிறது. அவர்கள் வீடுகள், தொழில்கள் புல்டோசர்கள் கொண்டு தகர்க்கப்படுகிறது. மாநில போலீஸ் கூட எதுவும் செய்யவில்லை. நாட்டின் குடிமகன்கள் மீதான தாக்குதல் என அதனை எதிர்த்து பேசினால் கூட நாட்டுக்கு எதிராக பேசுகிறார்கள் என்று கூறிவிடுகிறார்கள்.
குடியரசு தலைவர் பேசிய உரையை பதிவிறக்கம் செய்தேன். எனக்கு ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே கிடைத்தது. பட்ஜெட் உரையில் திருக்குறளில் மட்டுமே தமிழ் இருந்தது. பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறவில்லை. 2014 முதல் 2022 இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்த தொகை ரூ.74 கோடி. அதே காலகட்டத்தில் சம்ஸ்கிருத மொழிக்கு ரூ.1400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 121 மொழிகள் பேசப்படுகின்றன.
எஸ்சி, எஸ்.டி, பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோர் அரசு அதிகாரிகளாக மாறும் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. மின்சாரத்துறை 2022 விதியின் கீழ் மாநில அரசு அதிகாரம் குறைக்கப்பட்டு வருகிறது . அதே போல யூஜிசி விதிகள் மூலமும் பல்கலைக்கழகங்களை முழுதாக மத்திய அரசு அதிகாரம் செலுத்தி மாநில அரசு அதிகாரத்தை குறைக்கிறது.” என மத்திய அரசு மீதான பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசினார்.