“வாகனங்களில் ஹாரன் அடித்தால் இசை வரும்… புதிய சட்டம் விரைவில்” – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி..!
வாகனங்களில் ஹாரன் ஒலி எழுப்பினால் அதில் இந்திய இசை வருவதை கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலை திட்ட பணிகள் தொடக்க விழாவில் முன்னதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார்.அப்போது,அமைச்சர் கட்காரி நாசிக்கில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணித்தார்.
இதனையடுத்து,பேசிய அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:
“இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் 5 லட்சம் விபத்துகளால் 1.5 லட்சம் மக்களின் உயிரிழக்கின்றனர் மற்றும் லட்சக்கணக்கானோர் காயமடைகின்றனர். விபத்துகளால் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை இழக்கிறோம்.
எனினும்,மும்பை-புனே நெடுஞ்சாலையில் விபத்துகள் 50 சதவீதம் குறைந்துள்ளன.அதேபோல,தமிழக அரசு விபத்துகள் மற்றும் இறப்புகளை 50 சதவீதம் குறைத்துள்ளது, ஆனால் மகாராஷ்டிராவில் இதே போன்ற வெற்றியை அடைய முடியவில்லை.இதற்கிடையில்,வாகனங்களுக்கு ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமாக்கப்பட்டது.
மேலும்,மும்பை-நாசிக் நெடுஞ்சாலையின் ஆறு வழிச்சாலை மற்றும் சர்தா வட்டம் முதல் நாசிக்ரோடு வரை மூன்று அடுக்கு மேம்பாலம் போன்ற கோரிக்கைகளை நாசிக் மாவட்ட பாதுகாவலர் அமைச்சர் சாகன் புஜ்பால் முன்வைத்தார்.அந்த வகையில் தற்போது உள்ள நாசிக்-மும்பை நான்கு வழிச்சாலை நெடுஞ்சாலை விரைவில் சுமார் ரூ. 5,000 கோடி மதிப்பீட்டில் ஆறு வழிச்சாலையாக உருவாக்கப்படும்.
இந்த திட்டம் புனே நோக்கி பயணிக்கும் மக்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும். இந்த மேம்பாலம் நாசிக் நகரில் துவாரகா பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்கும்”,என்றார்.
இதனைத் தொடர்ந்து,பேசிய அமைச்சர் :”
இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் உள்ள ஹாரன்களில் இனிமேல் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே ஒலிக்குமாறு விரைவில் சட்டம் இயற்ற திட்டமிட்டு வருகிறோம்.ஏனெனில்,தற்போதுள்ள ஹாரன் ஒலியும், அமைச்சர்கள் அதிகாரிகள் செல்லும்போது பயன்படுத்தப்படும் சைரன் ஒலியும் வெறுப்பாக இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் காவல்துறை வாகனங்கள், ஆம்புலன்களில் பயன்படுத்தப்படும் சைரன் ஒலியை மாற்றி,காதுகளுக்கு இனிமையாக இருக்குமாறு மாற்ற,ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பாகும் இசை கோர்வையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
ஏனெனில்,இந்திய வானொலி காலையில் ஒலிபரப்பைத் தொடங்கும்போது காதுகளுக்கு இனிமையான இசை ஒலிக்கப்படும். அந்த இசைபோன்று ஆம்புலன்ஸ் சைரன் இருக்குமாறு மாற்றினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
காரணம்,ஹாரன் மற்றும் சிரங்களில் இனிமையான இசையை ஒலிப்பதன் மூலம் கேட்பவர்களுக்கும் மனதில் பதட்டம் ஏற்படாது.
We’re thinking of bringing a law under which use of sound of Indian musical instruments like harmonium, tabla,etc as a horn for vehicles will be compulsory. Sirens of ambulances&police vehicles will also be replaced with soothing sounds: Union Min Nitin Gadkari in Nashik on Oct 3 pic.twitter.com/FbVY1t4WpC
— ANI (@ANI) October 5, 2021
அதற்காக,இந்திய இசைக்கருவிகளான புல்லாங்குழல், வயலின், மவுத்ஆர்கன், ஹார்மோனியம் ஆகியவற்றின் இசை மூலம் ஹாரன் ஒலி அமைக்குமாறு ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக விரைவில் சட்டமும் இயற்ற திட்டமிட்டுள்ளோம்”,என்று கூறியுள்ளார்.