கர்னி சேனா தலைவர் கொலை வழக்கில் கொலையாளிகள் கைது !

ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பட்ட பகலில் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனாவின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி கடந்த 5-ஆம் தேதி ஜெய்ப்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஷியாம்நகர் பகுதியில் உள்ள சுக்தேவ் சிங் கோகமேடி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால்  சுட்டனர். அதன் பிறகு அவர் மெட்ரோ மாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சுக்தேவ் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும், உள்ளூர் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த சம்பவம் முழுவதும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.  பின்னர் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பது குறித்து தெரியாத நிலையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை நேற்று இரவு டெல்லி குற்றப்பிரிவு மற்றும் சண்டிகர் காவல்துறை கூட்டு நடவடிக்கையில் சண்டிகரில் கைது செய்யப்பட்டனர்.

ரோஹித் ரத்தோர் மற்றும் நிதின் ஃபௌஜி , உதம் ஆகிய 3 நபரை போலீசார் கைது செய்தனர்.  இதுகுறித்து காவல்துறை கூறுகையில், கொலை செய்தபிறகு , குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் ஆயுதங்களை மறைத்து ராஜஸ்தானில் இருந்து ஹரியானாவில் உள்ள ஹிசார் சென்றடைந்தனர். பின்னர் அங்கிருந்து இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலிக்கு சென்றனர். பிறகு  சண்டிகர் திரும்பியபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மொபைல் சிக்னல் அடிப்படை மூலம் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தோம் என தெரிவித்தனர்.

இந்த கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் ஏடிஜி தினேஷ் கூறுகையில், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்