I.N.D.I.A-வின் 3வது ஆலோசனை கூட்டம்.! பிரதமர் வேட்பாளர் யார்.? ஒருங்கிணைப்பாளர் யார்.?

INDIA Alliance Party Meeting

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை படு சுறுசுறுப்பாக ஆரம்பித்து செயல்படுத்தி வருகின்றன. கடந்த 2 முறை ஆட்சியை கைப்பற்றியுள்ள பலமான பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து  தேர்தல் கூட்டணியை அமைத்துள்ளன.

முதல் ஆலோசனை கூட்டம் :

காங்கிரஸ் , ஐக்கிய ஜனதா தளம், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் , ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டமானது பீகார் முதல்வரும்,  ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ்குமார்  அழைப்பின் பெயரின் நடைபெற்றது.

இரண்டாவது ஆலோசனை கூட்டம் :

அடுத்த கூட்டமானது கடந்த ஜூலை 17, 18 ஆகிய இரு தேதிகளில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இத கூட்டமானது காங்கிரஸ் அழைப்பின் பெயரின் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள்  கூட்டணிக்கு I.N.D.I.A ( Indian National Developmental Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டது. அதாவது, இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என அதன் அர்த்தம் வரையறுக்கப்பட்டது.

பிரதமர் பதவி வேண்டாம் :

மேற்கண்ட இரு ஆலோசனை கூட்டத்தை அடுத்து இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 2 ஆலோசனை கூட்டத்திலும் பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படவில்லை. மேலும், கடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்றே அறிவித்தார். பிரதமர் வேட்பாளர் பற்றி பின்னர் ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டது.

கடைசி கூட்டம் :

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விரைவில் பிரதமர் வேட்பாளர் அறிவித்து இதனை இறுதி ஆலோசனை கூட்டமாக மாற்ற வேண்டும் என இந்தியா கூட்டணையில் உள்ள சிவ சேனா (ஒரு பகுதி) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். ஏனென்றால் , தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச மாதம் தான் உள்ளதால், விரைவில் முடிவுகள் எடுத்து தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

I.N.D.I.A ஒருங்கிணைப்பாளர் :

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக , பாட்னா கூட்டத்தை முன்னின்று முதன்முறையாக ஒருங்கிணைத்த  பீகார் முதல்வரும்,  ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ்குமார் நியமிக்கப்படலாம் அல்லது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஒருங்கிணைப்பாளர் குழு :

அதே போல ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அல்லது மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி நியமிக்கப்படலாம் என தேர்தல் விமர்சகர் பிரசாந்த் கிஷோர் கருத்து கூறியுள்ளார். இன்றைய கூட்டத்தில் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பாளர் குழு அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

பிரதமர் வேட்பாளர் :

அதே போல பிரதமர் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார்கள் எனவும் மக்கள் மனதில் கேள்வி எழும்பியுள்ளது. பெரும்பாலானோர் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தான் அறிவிக்கப்படுவார் என கூறுகின்றனர். அதே போல டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் பெயரும் இதில் அடிபடுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளதும் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்