மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
இந்திய கடற்படை படகு மோதியதில் பயணிகள் படகு விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் சென்றுள்ளது. அப்போது அந்த படகின் மீது இந்திய கடற்படை படகு ஒன்று வேகமாக மோதியதில் கோர விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்து இந்திய கடற்படை தரப்பில் கூறுகையில், கடற்படைக்கு சொந்தமான படகு எஞ்சின் சோதனைக்காக இன்று பிற்பகல் கடலுக்குள் சென்றது. அப்போது எதிர்பாரா விதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்த விரைவு படகு பயணிகள் படகு மீது மோதியது என கூறியது.
இந்த விபத்து குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், பயணிகள் சுற்றுலா படகு மீது கடற்படை படகு மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 10 பேர் பொதுமக்கள், 3 பேர் இந்திய கடற்படை வீரர்கள். இதுவரை 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
மீட்பு பணிகளுக்காக 4 கடற்படை விமானங்கள் மற்றும் 11 கடற்படை கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் எத்தனை பேர் படகில் பயணித்தனர் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.