முக்தார் அன்சாரி மரணம்… உபியில் 144 தடை அமல்!
Mukhtar Ansari: கேங்ஸ்டரும், அரசியல்வாதியான முக்தார் அன்சாரி மாரடைப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து உபியில் 144 தடை உத்தரவு அமல்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபல கேங்ஸ்டரும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி (வயது 60) பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் அவர் மீது 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதனால் கடந்த 2022ம் ஆண்டு முதல் பல்வேறு நீதிமன்றங்களால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பாண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதில், குறிப்பாக 1991-ல் காங்கிரஸ் பிரமுகர் அவதேஷ் ராய் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்தார் அன்சாரியின் உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து அவர் பண்டா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு மாரடைப்பால் முக்தார் அன்சாரி உயிரிழந்தார். முக்தார் அன்சாரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் உபியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனால் பாண்டா, மவு, காசிப்பூர், வாரணாசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, முக்தார் அன்சாரி, மவு சதார் தொகுதியில் 5 முறை சட்டமன்ற உறுப்பினர் பதவியை வகித்திருந்த நிலையில் கடந்த 2005ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.