தவறான தகவல்களை அளிக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வேண்டும் -தேர்தல் ஆணையம் பரிந்துரை…!!
தவறான தகவல்களை அளிக்கும் எம்.பி., எம்எல்ஏக்களை தகுதி நீக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ய உள்ளது.
வேட்பு மனுவில் தவறான தகவல்களை தெரிவிக்கும் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை மாற்றி தகுதிநீக்கம் செய்யும் அளவுக்கு தேர்தல் விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்புகிறது. மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கு வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகைக்கு உச்ச வரம்பு விதிப்பது போல சட்ட மேலவை தேர்தலில் பிரசார செலவுக்கு உச்ச வரம்பு விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட உள்ளது.
பணம் கொடுப்பதை, கொலை, வரதட்சணைக் கொடுமை போன்ற மிகப்பெரிய குற்றச்செயலாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜனவரி 8-ம் தேதி முடிவடைந்த பின், மத்திய சட்டத் துறை செயலர் ஜி.நாராயண ராஜுவை சந்தித்து, தங்களது பரிந்துரைகளை தெரிவிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.