நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பேருந்துகள் இயக்கம்.. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!
நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளை இயக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாடு முழுவதும் பிரதமர் இ-பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நாடு முழுவதும் சுமார் 10,000 புதிய மின்சார பேருந்துகள் இயக்க மத்திய அமைச்சரை முடிவு செய்து, ஒப்புதல் அளித்துள்ளது. நகர்ப்புற பகுதிகளில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். புதிய மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான திட்ட மதிப்பீடு ரூ.57,613 கோடியில் ரூ.20,000 கோடியை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள தொகையை மாநில அரசுகள் செலுத்தும்.
பசுமை இயக்கம் மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, 100 நகரங்களில் 10,000 புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படும். இத்திட்டம் 3 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் செயல்படுத்தப்படும். பொது, தனியார் கூட்டாண்மை முறையில் கொள்முதல் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். இந்த திட்டம் 2037 வரை இருக்கும். சுமார் 10 ஆண்டுகளுக்கு பஸ் இயக்கத்திற்கு இத்திட்டம் உதவும் எனவும் கூறியுள்ளார்.
மத்திய அரசின் மின்சார பேருந்து திட்டத்தால் 45,000 லிருந்து 55,000 பேர் வரை வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விரிவுபடுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, ரூ.14,903 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.32,500 கோடி செலவில் இந்திய ரயில்வேக்கான 7 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் தெரிவித்தார்.