திருப்பதி மலைப்பாதையில் 40க்கும் மேற்பட்ட விபத்துகள்..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக திருப்பதியில் இருந்து திருமலைக்கும், திருமலையில் இருந்து திருப்பதிக்கும் தனித் தனி மலைப்பாதைகள் உள்ளன. திருப்பதி மலைப்பாதைகளில் தினமும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், பக்தர்களின் சொந்த வாகனங்கள், தேவஸ்தான மற்றும் அரசு வாகனங்கள் வந்து செல்கின்றன. பகல் நேரத்தில் ஒரு மணிநேரத்தில் 250-லிருந்து 300 அரசு பஸ்களும், 200-லிருந்து 250 மோட்டார்சைக்கிள்களும், 10-லிருந்து 20 தேவஸ்தான வாகனங்களும், 100-லிருந்து 150 பக்தர்களின் சொந்த வாகனங்களும் திருப்பதி மலைப்பாதைகளில் இயக்கப்படுகின்றன.
கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, அதிக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அந்த வாகனங்கள் மலைப்பாதைகளில் எங்குப் பள்ளம், மேடு, வளைவு இருக்கிறது என்பது தெரியாமல் ஓடுகின்றன. மலைப்பாதைகளில் வந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அந்த விபத்துகளில் பக்தர்களுக்கு எந்தவித உயிர்சேதமும் ஏற்பட்டதில்லை. எனினும், வாகனங்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளன.
அலிபிரி டோல்கேட்டை கடந்து திருமலையை நோக்கி மலைப்பாதையில் வரும் வாகனங்களுக்கு 28 நிமிடமும், திருமலையில் இருந்து திருப்பதியை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு 40 நிமிடமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை 4 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்து விட்டது. கால தாமதமாக வரும் வாகனங்களை எளிதில் அனுமதிப்பதில்லை. அந்த வாகனங்களுக்கு அலிபிரி மற்றும் திருமலையில் உள்ள ஜி.என்.சி. டோல்கேட்டில் அபராதம் விதிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் மலைப்பாதைகளில் அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் தான் மலைப்பாதைகளில் விபத்துகள் நடக்கின்றன. கடந்த ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் திருப்பதி மலைப்பாதைகளில் மொத்தம் 41 விபத்துகள் நடந்துள்ளதாக போக்குவரத்துப் போலீசார் தெரிவித்துள்ளனர். டிரைவர்கள் தூங்கி கொண்டே வாகனங்களை ஓட்டுவது, பான் பராக் உள்ளிட்ட போதை பாக்குகளை வாயில் போட்டுக்கொண்டு வாகனங்களை ஓட்டுவது, செல்போன் பேசி கொண்டே வாகனங்களை ஓட்டுதல், முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச்செல்ல முயலும்போது, சிலர் மலைப்பாதையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி வைப்பதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.
திருப்பதி மலைப்பாதைகளில் விபத்துகள் நடக்காமல் தடுக்க போக்குவரத்துப் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.