நாளை மறுநாள் காணொளி மூலம் பிரசாரத்தை துவங்கும் மோடி..!
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியான பாஜகவுக்கான பிரசாரத்தை காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் உரையாற்றுகிறார்.
உத்தரபிரதேசம், பஞ்சாப் , உத்தரகாண்ட் , மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜனவரி 31-ம் தேதி வரை பேரணிகள் மற்றும் சாலை நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், உ.பி.யில் சட்ட மன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். மேற்கு உ.பி.யில் உள்ள ஹாரன்பூர், பாக்பத், ஷாம்லி, முசாபர்நகர் மற்றும் கௌதம் புத்த நகர் போன்ற ஐந்து மாவட்டங்களில் ஒரே நேரத்தில் பிரதமர் மோடி நாளை மறுநாள் காணொலி மூலம் வாக்கு சேகரிக்க உள்ளார். இந்த காணொலி பிரச்சாரம் மூலம் சுமார் 21 சட்டமன்ற தொகுதிகளை அடைய கட்சி திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பிரச்சாரத்துக்காக 21 தொகுதிகளில் பெரிய எல்இடி(LED) திரை அமைக்கப்பட்ட உள்ளது. ஒரு எல்இடி(LED) திரையில் சுமார் 500 பேரைக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இந்தத் தடையை நீட்டித்தால் இதேபோன்ற காணொளி மூலம் பிரசாரத்தை பிரதமர் செய்வார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.