பரம்பரை பரம்பரையாக நிகழ்ந்து வரும் ஊழல் நாட்டுக்கு ஒரு பெரிய சவாலாக இருப்பதாக மோடி கருத்து…
சி.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி நேற்று முந்தினம் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பரம்பரை பரம்பரையாக நிகழ்ந்து வரும் ஊழல் நாட்டுக்கு ஒரு பெரிய சவாலாக இருப்பதாக கூறினார். இதுகுறித்து அவர், உங்களுக்கு முன்னால் இருக்கும் மற்றுமொரு சவால் குறித்து இன்று நான் குறிப்பிடுகிறேன். இந்த சவால் கடந்த பல பத்தாண்டுகளாக நாட்டில் படிப்படியாக வளர்ந்து வருகிறது. மேலும் நாட்டில் ஒரு வலிமையான வடிவத்தையும் எடுத்துள்ளது. அது என்னவென்றால் அது பரம்பரை ஊழல் ஆகும். அதாவது ஒரு தலைமுறையால் முன்னெடுக்கப்பட்ட ஊழலை அடுத்த தலைமுறையும் தொடர்வது ஆகும்.
இந்த செயல் நாட்டை கரையானைப்போல தொடர்ந்து அரிக்கிறது. ஒரு தலைமுறை ஊழலில் ஈடுபட்டு, தண்டனையில் இருந்து தப்புவதால், அடுத்த தலைமுறை அதைவிட பெரிய ஊழலை செய்கிறது. ஒருவர் வீட்டில் இருந்தவாறே கோடிக்கணக்கான பணத்தை ஊழல் மூலம் ஈட்டியும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லையென்றால், அவர்களுக்கு ஊழல் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிக்கிறது. எனவே, ஊழலுக்கு எதிரான போராட்டம் வெறும் ஒரு நிறுவனத்தின் பணியல்ல. இது ஒரு ஒட்டுமொத்த அமைப்புகளின் கடமை ஆகும் என்று பிரதமர் கூறினார்.