இந்தியாவில் மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி..!
இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவாக்ஸின், கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. தற்போது அமெரிக்காவின் நிறுவனமான மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த விண்ணப்பித்தது.
மேலும், மும்பையில் இருக்கும் சிப்லா நிறுவனமும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிற்கு (டிசிஜிஐ) விண்ணப்பம் ஒன்று விடுத்தது. அதில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து சிப்லா நிறுவனம் விற்பனை செய்ய அனுமதி கேட்டுள்ளது. அதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இந்த மருந்திற்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் ஆரம்ப கட்ட பரிசோதனைகள் இல்லாமல் மருந்தை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி விண்ணப்பித்தது.
சிப்லா நிறுவனம் முதலில் 100 பேருக்கு மருந்தை செலுத்தி அவர்களை கண்காணித்து மருந்து குறித்த அறிக்கையை டிசிஜிஐக்கு அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளது. இதனடிப்படையில் தற்போது அமெரிக்க நிறுவனமான மாடர்னா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியான ஸ்பைக்வாக்ஸ் என்ற தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சிப்லா நிறுவனம் இதை விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.