காணாமல் போன திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பாஜக அலுவலகத்தில் தஞ்சம்.! மகன் வைத்த வேண்டுகோள்.!!
மேற்கு வங்க மாநில மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான முகுல் ராய் நேற்று முன்தினம் டெல்லி சென்றிருந்த நிலையில், அவரை காணவில்லை என அவரது மகன் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் தனது தந்தை முகுல் ராய் சென்றதாகவும், அவர் சென்ற அந்த விமானம் நேற்று முன்தினம் இரவு 9.55 மணிக்கு டெல்லியை சென்றடைந்தது எனவும், ஆனால் முகுல் ராயை தொடர்பு கொள்ள முடியவில்லை என மகன் சுபர்க்ஷு ராய் கூறியிருந்தார்.
இந்த நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்ட முகுல் ராய் டெல்லிக்கு சென்ற நிலையில், பாஜக அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கு அவருக்கு பாஜக கட்சியினர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து ப துகாப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முகுல் ராய் ” நான் ஒரு பாஜக சட்டமன்ற உறுப்பினர். நான் பாஜகவுடன் இருக்க விரும்புகிறேன். நான் இங்கு தங்குவதற்கு கட்சி ஏற்பாடு செய்துள்ளது. நான் அமித் ஷாவை சந்தித்து (கட்சித் தலைவர்) ஜே.பி. நட்டாவிடம் பேச விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அவரை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முகுல் ராய் மகன் சுபர்க்ஷு ராய் ” என்னுடைய தந்தை உடல் நிலை பாதிக்கப்பட்டவர். இங்கு அவருக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. இதற்கு அரசியல் செய்யவேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ராய் டிஎம்சி கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து கடந்த 2017-இல் பாஜகவில் சேர்ந்தார். பாஜகவின் தேசிய துணைத் தலைவர் ஆகவும் அவர் ஆக்கப்பட்டார். இருப்பினும், 2021 மேற்கு வங்க தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, ராய் திரிணாமுல் காங்கிரசுக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.