வழிமறித்த பத்திரிகையாளர்கள்! புகார் கொடுத்த அமைச்சர் சுரேஷ் கோபி!
திருச்சூர் : தனது வழியை மறித்ததாகச் செய்தியாளர்கள் மீது அமைச்சர் சுரேஷ் கோபி திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மலையாள சினிமாவில், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி தைரியமாகப் புகார் அளித்து வருகிறார்கள். நடிகைகளில் அளிக்கும் புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப் பட்டவர்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பாக, நடிகர் முகேஷ் மீது ஐபிசி 376 சட்டத்தின் கீழ், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகப் பெண் நடிகை ஒருவர் கூறியதைத் தொடர்ந்து, பிரபல மலையாள நடிகரும், ஆளும் சிபிஐ(எம்) எம்எல்ஏவுமான எம்.முகேஷ் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், எம்எல்ஏ பதவியிலிருந்து முகேஷ் பதிவு விலகியே ஆகவேண்டும் எனக் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி திருச்சூரில் பத்திரிகையாளரைச் சந்தித்தபோது, இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளிக்க மறுத்த சுரேஷ் கோபி கோபத்துடன் பத்திரிக்கையாளர்களின் மைக்குகளை தள்ளிவிட்டு தன்னுடைய காருக்கு சென்றார். இதனையடுத்து, பத்திரிகையாளர்களைத் தள்ளிவிட்டுச் சென்றதாகக் கூறி, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அனில் அக்கரே திருச்சூர் காவல் ஆணையரிடம் சுரேஷ் கோபி மீது புகார் அளித்தார்.
அனில் அக்கரே அளித்த புகாரை விசாரிக்கவும் திருச்சூர் காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது. இந்த சூழலில், பாஜக எம்பி சுரேஷ் கோபியும் பத்திரிகையாளர்கள் தனக்கு தொல்லைக்கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். காரில் எற சென்றபோது தனது வழியை மறித்ததாகச் செய்தியாளர்கள் மீது சுரேஷ் கோபி திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.