வக்பு சட்டத்திருத்தம்., நாங்கள் எங்கும் ஓடவில்லை.. மத்திய அமைச்சர் பேச்சு.!
டெல்லி : 1995இல் திருத்தம் செய்யப்பட்டு இருந்த வக்பு வாரிய சட்டத்திருத்தமானது, தற்போது மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு வக்பு வாரிய திருத்த சட்டம் 2024 என மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டதிருத்தத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார்.
இந்த திருத்த சட்டத்தமானது இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாதங்களை மக்களவையில் முன்வைத்தனர். இந்த மசோதா மூலம், முஸ்லிம் அல்லாதவர்களும் வக்பு வாரிய குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இது மத சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என காங்கிரஸ் குற்றசாட்டை முன்வைத்தது.
முஸ்லிம் அல்லாதவர்களை வக்பு உறுப்பினர்களாக நியமிப்பது போல இந்து கோயில் நிர்வாகத்தில் மற்ற மதத்தினரை அனுமதிக்க முடியுமா என்று திமுகவும் விமர்சனம் செய்தது. இதே போல மற்ற எதிர்க்கட்சியினர்களும் தங்கள் எதிர்ப்புகளை மக்களவையில் பதிவு செய்தனர்.
எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தது பின்னர் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் வக்பு சட்டத்திருத்தம் 2024 பற்றி விளக்கம் அளித்தார். அதில், இந்த மசோதா ஐக்கிய வக்பு சட்ட மேலாண்மை என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் அதிகாரமளித்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை வக்பு வாரியத்தில் உறுப்பினராக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வக்பு வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இப்போது, எம்.பி., இந்துவாகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இருந்தால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.? நாடாளுமன்ற உறுப்பினர்களை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்துவது சரியல்ல. ஒரு எம்.பி., எம்.பி., என்ற தகுதியால் வக்பு வாரியத்தில் சேர்க்கப்பட வேண்டுமென்றால் அந்த எம்.பி., மதம் மாற வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில், இந்த சட்டதிருத்தத்தை தாக்கல் செய்துவிட்டு நாங்கள் எங்கும் ஓடிப்போகவில்லை. இந்த சட்ட திருத்தத்தை எந்தக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றாலும் அனுப்பி வைக்க நாங்கள் தயார். நான் மத்திய அரசின் சார்பில் பேச விரும்புகிறேன். இந்த சட்டத்திருத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இந்த மசோதாவுக்கு பரிந்துரைக்கப்பட்டு விரிவான விவாதம் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்தம் குறித்து விளக்கம் அளித்தார்.