அந்த ரயில்வே திட்டத்தை நிறுத்த சொன்னதே தமிழக அரசு தான்.! மத்திய அமைச்சர் குற்றசாட்டு.!
டெல்லி: ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில்வே திட்டத்தை தமிழக அரசு தான் நிறுத்த கோரியது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்தும், அதில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்தும் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
அதில், மத்திய பட்ஜெட்டில் 33,467 கோடி ரூபாய் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க 2,587 கி.மீ தூரத்திற்கு ரயில்வே பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு காலத்தில் காங்கிரஸ் அரசை காட்டிலும் தற்போது ரயில்வேக்கு 7 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் 687 புதிய ரயில்வே பாலங்கள், சுங்க பாதைகள் கட்டப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
பின்னர் தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் மற்றும் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் கூறுகையில், தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற 2,749 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதுவரை 807 ஹெக்டேர் நிலம் தான் மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்.
இங்கு பிரச்சனை மத்திய அரசு ஒதுக்கும் நிதியை பற்றியது அல்ல. நிலம் கையகப்படுத்துவது பற்றியது. ராமேஷ்வரம் – தனுஷ்கோடி ரயில்வே திட்டத்தை நிறுத்த வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசுக்கு அதிகாரபூர்வமாக கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் மாநில அரசால் நிலம் கையகப்படுத்துதல் செய்யாமல் இருப்பதால் அவை கிடப்பில் உள்ளது.
பிரதமர் மோடிக்கு அனைத்து மாநிலங்களும் முன்னேற வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கமாக உள்ளது. தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு பட்ஜெட்டில் 6,080 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு பட்ஜெட்டில் 6,362 கோடி ரூபாய் உயர்த்தி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.