‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படும் – அமைச்சர் அமித்ஷா.!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
டெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் இன்று அறிமுகம் செய்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெரும்பான்மை இல்லாத பாஜக அரசு எப்படி இந்த மசோதாவை அறிமுகம் செய்ய முடியும் என திமுகவும், தனிநபர் விருப்பத்திற்காகக் கொண்டுவரப்படுவதாக திரிணாமுல் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என திமுக எம்.பி டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்தார்.
இதனை அடுத்து, மசோதா நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு விவாதத்திற்காக அனுப்பப்படும் எனவும், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் விவாதம் நடத்தி அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
தற்பொழுது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திய நிலையில், கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்புவது தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.