விண்வெளி ஸ்டார்ட்அப்களை மேம்படுத்த, இஸ்ரோவுடன் இணையும் மைக்ரோசாப்ட்.!
இந்திய விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை மேம்படுத்தும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இஸ்ரோவுடன் இணைந்து செயல்படவுள்ளது.
இந்திய விண்வெளித்துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் இஸ்ரோ இணைந்து செயல்படவுள்ளது. மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பில் கலந்து கொண்டபின் இதனை அறிவித்தார்.
இதன் மூலம் இஸ்ரோவால் குறிப்பிடப்படும் சில விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், “மைக்ரோசாப்ட் ஃபார் ஸ்டார்ட்அப்ஸ் ஃபவுண்டர்ஸ் ஹப்” என்ற தளத்துடன் இணைக்கப்படும். செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங்(Machine Learning) போன்ற அதிநவீன முறைகளைப் பயன்படுத்துதல், பல்வேறு செயற்கைகோள் தரவுகளின் பயன்பாடுகள் போன்றவற்றை அறிந்துகொள்ள விண்வெளி தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று இஸ்ரோவின் தலைவர் எஸ் சோமநாத் கூறினார்.
மேலும் இந்த ‘மைக்ரோசாப்ட் ஃபார் ஸ்டார்ட்அப்ஸ் ஃபவுண்டர்ஸ் ஹப்’ மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை உருவாக்க மற்றும் நடத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப கருவிகள் பெற முடியும். இதன்மூலம் அதிநவீன கண்டுபிடிப்புகளை இயக்கவும், அறிவியல் கண்டுபிடிப்பை விரைவுபடுத்தவும் நாட்டில் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை மேம்படுத்துவதில் நாங்கள் ஆழ்ந்த உறுதியுடன் இருக்கிறோம்” என்று மைக்ரோசாப்ட் இந்தியாவின் தலைவர் ஆனந்த் மகேஸ்வரி கூறினார்.