மெட்ரோ திட்டம்: பிரதமரின் புனே பயணம் கனமழையால் ரத்து!
புனே மெட்ரோவின் புதிய வழித்தடத்தையும், நகரின் பிற வளர்ச்சிப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவிருந்தார்.
மகாராஷ்டிரா : மும்பையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்றும் கனமழை தொடரும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
நேற்று மாலை வெறும் மூன்று மணி நேரத்தில் 131 மிமீ மழை பெய்த புனேக்கு IMD ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில், புனே மெட்ரோவின் புதிய வழித்தடத்தையும், நகரின் பிற வளர்ச்சிப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவிருந்தார். தொடர் கனமழை காரணமாக மோடியின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மாலை 6 மணியளவில், மாவட்ட நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சியில், மாவட்ட நீதிமன்றத்திலிருந்து புனேவின் ஸ்வர்கேட் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயிலை அவர் கொடியசைத்து தொடங்கி வைக்க இருந்தார்.
அதன்பிறகு, மாலை 6:30 மணியளவில், ரூ.22,600 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்ட விருந்தார். மாவட்ட நீதிமன்றம் முதல் ஸ்வர்கேட் வரையிலான திட்டத்திற்கு சுமார் ரூ .1,810 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரூ.2,950 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள புனே மெட்ரோ முதல் கட்டத்தின் ஸ்வர்கேட்-கத்ராஜ் விரிவாக்கப் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவும் அது மட்டும் இல்லாமல், பிடேவாடாவில், கிராந்திஜோதி சாவித்ரிபாய் பூலேவின் முதல் பெண்கள் பள்ளிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார் எனவும் கூறப்படுகிறது.