தற்போது பாலியல் தொடர்பாக பாதிப்புகளை பெண்கள் ஒருங்கிணைந்து MeToo_வில் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் கேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தகடுகளை பதித்து தருவதாக மக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றி விட்டதாக சரிதா நாயர், பிஜூ ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது. இந்த ஊழலில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு அப்போதைய முதல்-மந்திரி உம்மன் சாண்டி, மின்சார மந்திரி உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக நீதிபதி ஜி.சிவராஜன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உம்மன் சாண்டி 2013-ம் ஆண்டு, அக்டோபரில் உத்தரவிட்டார். இந்த விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந் தேதி கேரள அரசிடம் வழங்கியது.
அந்த அறிக்கை கேரள சட்டசபையிலும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்கு சரிதா நாயருக்கும், அவரது கம்பெனிக்கும் முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியும், அவரது அந்தரங்க உதவியாளரும் எல்லா உதவிகளையும் செய்துள்ளதாக கூறப்பட்டது.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுடன், குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயரிடம் அவர்கள் செக்ஸ் இன்பம் பெற்றதாகவும் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டது.இந்தநிலையில் சூரிய மின்தகடு ஊழலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.சரிதா நாயர் புகாரின் பேரில் உம்மன் சாண்டி, கே.சி. வேணுகோபால் எம்.பி., ஆகியோர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் திடீரென பலாத்கார வழக்குகள் பதிவு செய்து உள்ளனர்.
இது தொடர்பான புகாரில் சரிதா நாயர் கூறி இருப்பதாவது:-
கடந்த 2012-ம் ஆண்டு, உம்மன்சாண்டி திருவனந்தபுரத்தில் உள்ள முதல்-மந்திரிக்கான அதிகாரபூர்வ இல்லமான கிளிப் இல்லத்தில் வைத்து என்னை பலாத்காரம் செய்தார்.இதேபோன்று கே.சி. வேணுகோபால் எம்.பி., அப்போதைய மந்திரி ஏ.பி.அனில்குமாரின் ரோஸ் இல்லத்தில் வைத்து என்னை பலாத்காரம் செய்தார்.அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தனது புகாரில் கூறி உள்ளார்.இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹரா நேற்று உறுதி செய்தார்.
இது தொடர்பாக அவர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “சரிதா நாயர் அளித்த புகாரின் மீது 2 தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டம் தனது கடமையை செய்யும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறும்போது, “இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்கு போலீஸ் சூப்பிரண்டு அப்துல் கரீம் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.தன் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து உம்மன் சாண்டி கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
இந்த வழக்கினை சட்ட ரீதியாக சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.இந்த வழக்கு, அரசியல் உள்நோக்கம் கொண்டது ஆகும்.சபரிமலை விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு இடதுசாரி கூட்டணி அரசு மேற்கொண்டுள்ள முயற்சிதான் இந்த வழக்கு ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.
பலாத்கார வழக்கில் சிக்கி உள்ள உம்மன்சாண்டியும், கே.சி.வேணுகோபாலும் தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பதவி வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU