Meningitis: மூளைக்காய்ச்சலை முற்றிலும் ஒழிப்பதில் உத்தரபிரதேச அரசு வெற்றி பெற்றுள்ளது.! முதல்வர் யோகி
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 50,000 குழந்தைகளைக் கொன்ற மூளைக்காய்ச்சல் நோய் உத்தரபிரதேசத்தில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக ஒரு பெரிய பிரச்சாரத்தை நாடு முழுவதும் நடத்த ஊக்கமளித்தார். உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் மூளைக் காய்ச்சலால் மரணங்கள் நிகழ்ந்தது எனக்கு நினைவிருக்கிறது.”
“1977 முதல் 2017ம் ஆண்டு வரை, உத்தரபிரதேசத்தில் சுமார் 50,000 குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2018 க்குப் பிறகு குறைந்தது. இன்ட்ரா டிபார்ட்மெண்டல் கன்வெர்ஜென்ஸின் உதவியுடன் உத்தரபிரதேசத்தில் மூளைக்காய்ச்சல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்பதே இன்றைய நிலை.” என்று கூறினார்.
தொடர்ந்து, “இது ஒரு நோய்க்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, ஊட்டச்சத்து குறைபாட்டின் பின்னணியில் உள்ள காரணம் போன்ற பல சிக்கல்களையும் நாங்கள் கவனித்தோம். மூளைக்காய்ச்சலுக்கு எதிரான போராட்டத்தில் குழந்தைகள் மற்றும் தேசத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் உத்தரப்பிரதேசம் வெற்றி கண்டது.” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.