150 லாரி ஓட்டுனர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து விருந்து படைத்த மீரா பாய் சானு…!
தனது கடினமான காலங்களில் உதவியதற்காக 150 லாரி ஓட்டுனர்களுக்கு தனது வீட்டில் வைத்து மீரா பாய் சானு விருந்து படைத்துள்ளார்.
மணிப்பூர் மாநிலம் இம்பால் பகுதியில் உள்ள நோங்போங் கக்சிங் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த வீட்டின் கடைக்குட்டி தான் மீராபாய் சானு. இவர் தனது சிறு வயது முதலே மிக கடுமையான வறுமையை கடந்து வந்துள்ளார். தனது பள்ளிப்படிப்பை வறுமையிலேயே கடந்து வந்த இவர், பளு தூக்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்துள்ளார். எனவே, அது தான் தனது எதிர்காலம் என நினைத்து பளு தூக்கும் முயற்சியில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
ஆனால், இவர் பளு தூக்கும் பயிற்சி பெறக்கூடிய பயிற்சி மையம், இவரது கிராமத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருந்துள்ளது. இந்த பயிற்சி மையத்துக்கு செல்வது பெரும் சவாலாக இருந்துள்ளது. இந்த கடினமான காலகட்டத்தில் தனது கிராமத்தின் வழியே இம்பால் நகருக்கு மணல் ஏற்றிக் கொண்டு செல்லக்கூடிய லாரிகளில் அனுமதி கேட்டு தான் இவர் இலவசமாக பயணம் செய்து வந்துள்ளார். பல வருடங்களாக அந்த லாரி ஓட்டுனர்கள் மீராபாய் சானுவுக்கு இலவசமாக பயணம் வழங்கியுள்ளனர். இவர்கள் வழங்கிய இலவச பயணம் மூலமாகத்தான் மீராபாய் சானு தனது பயிற்சியை தொடர்ந்துள்ளார்.
மேலும் அதன் மூலம் சேமித்த பணத்தை வைத்து தனது டயட் செலவுகளை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள மீராபாய் சானு தனக்கு உதவிய லாரி ஓட்டுனர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லாரி ஓட்டுனர்கள் மற்றும் க்ளீனர்கள் உட்பட 150 பேரை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவு பரிமாறி விருந்து படைத்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய மீராபாய் சானு, வீட்டில் இருந்து தனது பயிற்சி மையத்திற்கு செல்வதற்கு இலவசமாக பயணம் வழங்கிய லாரி ஓட்டுனர்கள் அனைவரது ஆசீர்வாதத்தையும் தான் பெற விரும்பியதாக கூறியுள்ளார். மேலும், எனது கடினமான காலங்களில் அவர்கள் எனக்கு மிகவும் உதவினார்கள். எனவே அவர்களுக்கு இப்போது என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதற்கு நான் காத்திருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இந்த கடினமான காலகட்டத்தில் உதவிய அனைவரையுமே தனிப்பட்ட முறையில் சந்தித்து நன்றியை தெரிவிக்க முயற்சித்து வருகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.