ஏப்ரல் 26ம் தேதி டெல்லியில் மீண்டும் மேயர் தேர்தல் – ஆம் ஆத்மி அறிவிப்பு

Default Image

மீண்டும் டெல்லியின் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும் என ஆம் ஆத்மி எம்பி அறிவிப்பு.

டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது. முதல்வரும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் மேயர் வேட்பாளராக ஷெல்லி ஓபராய் மீண்டும் தேர்தலில் நிறுத்தப்படுவார் என்று முடிவு செய்துள்ளார். துணை மேயர் பதவிக்கு, ஆலி முஹம்மது இக்பால் எங்கள் வேட்பாளராக இருப்பார்.

மீண்டும் போட்டி:

முன்னதாக மேயர் தேர்தலை சீர்குலைக்க பாஜக முயற்சித்த போதிலும், ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இந்த முறையும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.  எனவே, மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு ஷெல்லி ஓபராய் மற்றும் ஆலே முகமது இக்பால் ஆகியோரை நாங்கள் மீண்டும் போட்டியிட வைப்போம் என்றார்.

புதிய மேயர் தேர்வு:

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) ஒவ்வொரு நிதியாண்டு முடிந்த பிறகும் புதிய மேயரை தேர்ந்தெடுக்கும். டெல்லியில் மேயர் பதவியானது சுழற்சி அடிப்படையில் ஐந்து ஆண்டு காலங்களை கொண்டுள்ளது. முதல் ஆண்டு பெண்களுக்கும், இரண்டாவது திறந்த பிரிவினருக்கும், மூன்றாவது இட ஒதுக்கீடு பிரிவினருக்கும், மீதமுள்ள இரண்டு மீண்டும் திறந்த பிரிவினருக்கும் ஒதுக்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தல்:

டெல்லியில் மூன்று மாநகராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்ட பின்னர், 2012ல் 272 வார்டுகளில் இருந்து 250- ஆக குறைக்கப்பட்டது. 250 வார்டுகள் கொண்ட ஒரே மாநகராட்சியாக டெல்லி உருவானது. இந்த மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 4ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே தான் மும்முனை போட்டி நிலவிய நிலையில், இதில் ஆம்ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது.

மேயர் வேட்பாளர்:

கடந்த 2007 முதல் 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக கோட்டையாக இருந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆம் ஆத்மி. இதையடுத்து, பாஜக – ஆம் ஆத்மி இடையே மோதலால் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராய், பாஜக சார்பில் ரேகா குப்தா ஆகியோர் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.

மீண்டும் மேயர் தேர்தல்:

இதில் 150 ஓட்டுக்கள் பெற்று ஷெல்லி ஓபராய் டெல்லி மாநகராட்சி மேயரானார். துணை மேயராக ஆலி மொஹட் இக்பால் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், நிதியாண்டு காலம் முடிந்த நிலையில், மீண்டும் டெல்லியின் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு ஷெல்லி ஓபராய் மற்றும் ஆலே முகமது இக்பால் ஆகியோர் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்