ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து! 5 பேர் உடல் கருகி பலி!
இந்த சம்பவத்தில் சிலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக காவல்துறை தகவலை தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற டிரக்குகளுடன் மோதியதில் 5 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங்க் முன் இந்த சம்பவம் நடந்ததாகவும் காவல்துறையினர் கூறினார்கள்.
அதிகாலை 5:30 மணியளவில், பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி டேங்கர் மற்ற வாகனங்கள் மீது டிரக் மோதியதில் தீப்பிடித்தது. தீப்பிடித்து எரிந்த தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 5 பேர் தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இன்னும் உயிரிழப்பு அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், இந்த விபத்தில் இன்னும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எத்தனைபேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்ட தகவல்களின்படி, மற்ற வாகனங்கள் மீது மோதிய லாரியில் ரசாயனம் கசிந்து தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாங்க்ரோட்டாவின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO), மணீஷ் குப்தா கூறியதாவது ” இந்த விபத்தின் போது பல டிரக்குகளில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சேதம் அடைந்த லாரிகளின் எண்ணிக்கை பற்றி தெளிவான தகவல் வெளிவரவில்லை. தீக்காயங்களுடன் சிலர் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.
இருப்பினும், ஆங்கில செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தகவலின் படி, இந்த விபத்தில் 23 முதல் 24 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக சவாய் மான் சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சுமார் 40 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாக செய்திகளை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.