மேலும் பல நிறுவனங்களுக்கு தடுப்பூசி உற்பத்தி செய்யும் உரிமத்தை வழங்க வேண்டும் – நிதின் கட்காரி!
மேலும் பல நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யக்கூடிய உரிமத்தை வழங்க வேண்டும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.67 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்து 529 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 2.54 கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 32 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசிகள் போட தீவிரிப்பதால் நாட்டில் தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தாலும் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே உரிமம் பெற்று கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வரும் நிலையில் மேலும் பல நிறுவனங்களுக்கும் தயாரிப்பு முறைகளை வழங்கி அந்த நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ள நிலையில், மத்திய மந்திரி நிதின் கட்காரி அவர்களும் தற்பொழுது இது குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சரவையில் போக்குவரத்துதுறை மந்திரியுமாகிய நிதின் கட்காரி அவர்கள், கொரோனா தடுப்பூசி தேவை அதிகமாக இருப்பதால் ஒரு நிறுவனத்திற்கு பதிலாக கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் உரிமத்தை பத்து நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய தடுப்பூசிகளை நாட்டிற்கு விநியோகிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தேவைக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம் எனவும், இதை 10 முதல் 20 நாட்களுக்குள் மேற்கொள்ளலாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.