திகார் சிறையில் அடைக்கப்பட்டார் மணீஷ் சிசோடியா!
பிப்.27 முதல் இன்று வரை சிபிஐ காவலில் இருந்த மணீஷ் சிசோடிய திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
டெல்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான மணீஷ் சிசோடியா திகார் சிறையின் எண் 1 சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை சம்பந்தமாக அரசுக்கு பலகோடி ரூபாய் நிதி இழப்பீடு ஏற்பட்டதாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணபரிவார்த்தனை நடைபெற்றதாகவும் கூறி மணீஷ் சிசோடியாவை பிப்.26ஆம் தேதி 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிபிஐ கைது செய்தது.
இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர், முதலில் 5 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின் மேலும் 2 நாள் காவலில் விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த சிபிஐ காவல் முடிந்து மீண்டும் அவர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மணீஷ் சிசோடியாவை மார்ச் 20ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிப்.27 முதல் இன்று வரை சிபிஐ காவலில் இருந்த மணீஷ் சிசோடிய திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்படி, மணீஷ் சிசோடியா திகார் சிறையின் எண் 1 சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனிடையே, சிபிஐ கைதை அடுத்து தனது துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.