இதை செய்தால் 24 மணி நேரத்தில் கெஜ்ரிவால் ரிலீஸ் ஆவார்.! சிசோடியா நம்பிக்கை.!
டெல்லி : ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 17 மாதங்கள் சிறையில் இருந்த சிசோடியாவுக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜாமீனில் வெளியே வந்த மணீஷ் சிசோடியா இன்று டெல்லியில் நடைபெற்ற ஓர் அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் தற்போது ஜாமீனில் வெளியே வந்தது விடுமுறையை கொண்டாட அல்ல. கடினமாக வேலைசெய்ய வந்துள்ளேன் என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், இன்றிலிருந்து இப்போதே டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும். சர்வாதிகாரத்துக்கு எதிரான இந்த போராட்டத்தை ஆம் ஆத்மி கட்சி , எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், மக்களும் போராட வேண்டும் என்பதை ஒவ்வொரு கட்சித் தொண்டர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன். சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி மட்டுமின்றி அனைவரும் போராட வேண்டும்.
.இந்த சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால், நமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். இன்று ஆம் ஆத்மியின் தலைவர்கள் சிறையில் இருக்கிறார்கள். நாளை நீங்களும் சிறையில் தள்ளப்படுவீர்கள். ஆதலால், நாட்டிற்காக ஒன்றுபட்டு போராடுவோம்.
இன்று நான் இந்த மேடையில் இருந்து சொல்கிறேன், நாட்டின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சித் தலைவர்களும் முழு பலத்துடன் ஒருசேர குரல் கொடுத்தால், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த 24 மணி நேரத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துவிடுவார். அனைவரும் ஒற்றுமையாக தேர்தலில் போராட வேண்டும் என்று டெல்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா இன்றைய நிகழ்வில் உரையாற்றினார்.