திகார் சிறையில் இருந்து வெளிய வந்த மணீஷ் சிசோடியா..!
டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தற்போது திகார் சிறையில் உள்ளார். சமீபத்தில் டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில், சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவியைச் சந்திக்க நேற்று தனது வீட்டிற்கு வந்தார். டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மணீஷ் சிசோடியா தனது மனைவியைச் சந்திக்க ஆறு மணி நேரம் அனுமதி அளித்தது.
காலை 10 மணியளவில் சிறை வேனில் மதுரா சாலையில் உள்ள தனது வீட்டிற்கு சிசோடியா வந்தடைந்தார். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவரது மனைவியை சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சந்திப்பு நேரம் முடிந்ததும் அவர் சிறைக்கு திரும்பினார். இந்த சந்திப்பின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
மணீஷ் சிசோடியா கைது:
டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து, மார்ச் 9-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. கலால் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றன. பிப்ரவரி 28-ம் தேதி டெல்லி அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.