மணிஷ் சிசோடியா ஜாமீன் மனு – வரும் 26ம் தேதி உத்தரவு பிறப்பிக்கிறது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம்.
டெல்லி அரசின் புதிய மதுபான கலால் வரி (தற்போது ரத்து செய்யப்பட்ட) கொள்கையில் முறைகேடு நடந்ததாக கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரிய மனு மீது வரும் 26ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. மதுபானக் கொள்கை மூலம் முறைகேடு என கூறி டெல்லி துணை முதல்வராக இருந்தவர் மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, 8 மணி நேர விசாரணைக்கு பிறகு சிபிஐ கைது செய்தது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சிபிஐ-ஐ தொடர்ந்து அமலாக்கத்துறையும் சிசோடியாவை மீண்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் ஜாமீன் கோரிய மணிஷ் சிசோடியாவின் மனு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுமான கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் அமலாக்கத்துறை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவை டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்திவைத்தது. மணீஷ் சிசோடிய ஜாமீன் கோரிய மனு மீது ஏப்ரல் 26 மாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் ஏப்ரல் 27 வரையும், அமலாக்கத்துறை காவல் ஏப்ரல் 29 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.