Manipur violence: உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் மாநில டிஜிபி..!
மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கில், மணிப்பூர் டிஜிபி ராஜீவ் சிங் உச்சகநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினர்கள் இடையே நடந்து வரும் வன்முறையில், 150க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர். மேலும், இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்ற வீடியோவும் வெளியாகி, நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் தொடர்பாக வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக விசாரணை எதுவும் முழுமையாக நடைபெற்றதாக தெரியவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அதிக தாமதம் ஏற்பட்டுள்ளது, கைது நடவடிக்கை எதும் எடுக்கப்படவில்லை.
வாக்குமூலங்கள் பதிவு கூட இன்னும் முடியவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பிறகு, மணிப்பூர் மாநிலத்தில் எந்த சட்ட ஒழுங்கும் இல்லை. மணிப்பூர் மாநிலத்தின் டிஜிபி என்ன செய்து கொண்டிருக்கிறார் என தலைமை நீதிபதி கேள்வியை எழுப்பினார்.
மணிப்பூர் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின், மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கில் மணிப்பூர் டிஜிபி ராஜீவ் சிங் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பி, வழக்கை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதன்படி, மணிப்பூர் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ராஜீவ் சிங் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். மேலும், மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண்களின் பெயர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரக்கூடாது, நீதிமன்ற ஆவணங்கள் என எதையும் பகிரக்கூடாது எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.