மணிப்பூர் வன்முறை: இரண்டு மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் சோதனை..! வெடிகுண்டு, ஆயுதங்கள் மீட்பு..!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் இரு பிரிவினர்கள் இடையே நடந்து வரும் வன்முறையில், 150க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர். மேலும், இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்ற வீடியோவும் வெளியாகி, நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் காங்போக்பி மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் உள்ள வன்முறை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளப் பகுதிகளில் கூட்டுப் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் பல துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது குறித்து போலீசார் கூறியதாவது, கடந்த 24 மணி நேரத்தில், துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு மற்றும் போராட்டக்காரர்களின் கூட்டம் போன்ற சம்பவங்களால் மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதற்கிடையில், காங்போக்பி மற்றும் இம்பால்-மேற்கு மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஐந்து ஒற்றை போர் ரைபிள்கள், நான்கு மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஏவுகணைகள், முப்பத்தாறு போர் ரவுண்டுகள், ஒரு வாக்கி-டாக்கி சார்ஜர் மற்றும் எட்டு மொபைல் போன்கள் மீட்கப்பட்டன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.