மணிப்பூர் நிலவரம்… அமித்ஷா தலைமையில் இன்று டெல்லியில் அனைத்து கட்சிக்கூட்டம்.!
டெல்லியில் இன்று அமித்ஷா தலைமையில் மணிப்பூர் நிலவரம் தொடர்பாக அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது.
மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதால், அம்மாநிலத்தின் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், நிலவரம் குறித்தும் ஆலோசனை செய்ய அனைத்து கட்சிகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்திருந்தார். மெய்ட்டி இன சமூகத்தினரை அட்டவணைப் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து, மோதல் வெடித்ததை அடுத்து, அங்கு வன்முறை வெடித்தது.
இதில் மணிப்பூரில் தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற வன்முறை சம்பவங்களால் 110 க்கும் மேற்பட்ட உயிர்கள் இதுவரை பலியாகியுள்ளனர். இந்நிலையில் மணிப்பூரில் நிலவும் நிலைமை குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் 50 நாட்களாக எரிகிறது, ஆனால் பிரதமர் அமைதியாக இருந்தார், தற்போது அமெரிக்க பயணம் சென்றுள்ளார். பிரதமர் மோடி நாட்டில் இல்லாதபோது அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதமருக்கு இந்த கூட்டம் முக்கியமில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.