பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது மணிப்பூர் சட்டப்பேரவை!
மணிப்பூரில் இரு மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் கலவரம், வன்முறை என்ற மோசமான சூழ்நிலை கட்டுக்குள் வந்ததை அடுத்து அம்மாநில சட்டப்பேரவை இன்று கூடுகிறது. அங்கு குகி -மெய்தி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரங்கள் குறித்து பேரவையை அதிர வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
மணிப்பூரில் கடைசியாக பிப்ரவரி-மார்ச் ஆகிய மாதங்களில் பட்ஜெட் கூட்டத் தொடர் கூடியது. மே 3 அன்று வெடித்த மோதல்கள் கரமாக மழைக்கால கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, இது குறித்து மணிப்பூர் சபாநாயகர் தோக்சோம் சத்யபிரதா சிங் கூறுகையில், மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்றார்.
இன்றைய அலுவல்களின்படி, கேள்வி நேரம் அல்லது தனிப்பட்ட உறுப்பினர் தீர்மானம் எதுவும் இருக்காது. தற்போது நடைபெற்று வரும் மோதல்களின் நெருக்கடி குறித்த சில தீர்மானங்கள் இந்த அமர்வில் நிறைவேற்றப்படும் என மாநில பாஜக கட்சி வட்டாரங்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.