மணிப்பூர் : பாதுகாப்புப் படையினரால் 11 பேர் சுட்டுக் கொலை!
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11குக்கி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. அசாமின் எல்லையோர மாவட்டத்தில் குக்கி தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சிலரும் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்தேகத்திற்குரிய குகி தீவிரவாதிகள் ஜிரிபாமில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் மீது முதலில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பிறகு, பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையத்தை ஒட்டி உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண முகாம் உள்ளது. எனவே, இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அந்த முகாமையும் குறிவைத்துத் தாக்கியிருக்கலாம் என வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர்.
காவல் நிலையத்தைத் தாக்கிய பிறகு , அந்த தீவிரவாதிகள் 1 கிமீ தொலைவில் உள்ள ஜகுரடோர் கரோங்கில் ஒரு சிறிய குடியேற்றத்தை நோக்கி வீடுகளுக்கு தீ வைக்கத் தொடங்கினர், அதே சமயம், அவர்கள் ஒரே நேரத்தில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில், பாதுகாப்புப்படை வீரர்கள் 11 தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்றுள்ளனர்.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல்துறை படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சிலரும் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தற்போது மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜிரிபாமின் போரோபெக்ராவில் உள்ள இந்த காவல் நிலையம் மீது குறி வைத்தது முதல் முறை இல்லை. சமீபத்திய சில மாதங்களில் பல முறை குறிவைக்கப்பட்டது. குறிப்பாகக் கடந்த வாரம் தாக்குதல் நடைபெற்ற நிலையில், மீண்டும் வன்முறை வெடித்ததால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.