ஆதாரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் – மத்திய அரசு அறிவிப்பு
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை கட்டாயம் மேம்படுத்திக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தல்.
ஆதார் கார்டு விதிமுறைகளை மத்திய அரசாங்கம் திருத்தியுள்ளது. அதன்படி, ஆதார் ஆவணங்களை பதிவு செய்த தேதியில் இருந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் ஆதார் வைத்திருப்பவர்கள் “குறைந்தது ஒரு முறை” கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, ஆதாரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் (யுஐடிஏஐ) சார்பில் மக்களுக்கு 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என தகவல் கூறப்படுகிறது. இதற்காக, பெயர், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் பெறப்படுவதுடன், 10 விரல் ரேகைகள், கருவிழிப் படலம் உள்ளிட்ட தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் பயோமெட்ரிக் தகவல்கள், விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தை சமர்ப்பித்து ஆதாரை அப்டேட் செய்வது அவசியம். ஆதார் (பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல்) விதிமுறைகளை மாற்றியமைப்பதன் மூலம் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
myAadhaar இணையதளம் மற்றும் செயலியில் ‘அப்டேட் டாக்குமெண்ட்ஸ்’ என்ற பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும், அனைத்து ஆதார் மையங்களுக்கும் நேரில் சென்றும் ஆதாரை புதுப்பித்து கொள்ளலாம் எண்ணென்று அறிவிக்கப்பட்டுள்ளது.