உ.பி முதல்வரை விரட்டியடித்த மம்தா…!!
மேற்கு வங்க மாநிலத்தில் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால், பொதுக்கூட்டத்தினரிடையே தொலைபேசியில் உரையாற்றினார். உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.கவினர் நடத்தும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற இருந்தார். இதற்காக உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து, ஹெலிகாப்டர் மூலம், மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கன்ச் என்னுமிடத்திற்கு செல்ல இருந்தார்.
முன்னதாக அதற்கான தகவலை முறைப்படி அளிக்காத காரணத்தால், ஆதித்யநாத்துக்கு, மம்தா தலைமையிலான அரசு, ஹெலிகாப்டர் தரையிறக்கம் செய்ய அனுமதி தர மறுத்ததாகத் தெரிகிறது. இதனால், மேற்கு வங்க மாநிலத்தில், பலூர்காட் என்னுமிடத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தினரிடையே, யோகி ஆதித்யநாத் தனது வீட்டிலிருந்தபடி தொலைபேசியிலேயே பேருரையாற்றினார்.
அப்போது பேசிய ஆதித்யநாத், அதிகாரத்தை மம்தா தவறாகப் பயன்படுத்தக்கூடாது என சாடினார். இது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. ஏற்கனவே, இதே போன்று, அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரையிரங்க மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.