“இன்று எங்கள் கட்சிக்கு முக்கியமான நாள்., ஆனால்.? ” – மம்தா உருக்கமான பதிவு.!
கொல்கத்தா : இன்று திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பு தினத்தை கொண்டாடவில்லை என்று மம்தா பேனர்ஜி தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆளும் அரசாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது இன்றைய தினத்தை (ஆகஸ்ட் 28) ஆண்டுதோறும், சத்ர பரிஷத் ( கட்சியின் மாணவர் அமைப்பு) தினமாக கொண்டாடி வருகிறது. ஆனால், இந்த ஆண்டு சத்ர பரிஷத் தினத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொண்டாடவில்லை. அதற்கான காரணத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பேனர்ஜி தெரிவித்தார்.
அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ” சில நாட்களுக்கு முன்பு ஆர்.ஜி கர் மருத்துவமனையில் உயிரிழந்த எங்கள் சகோதரிக்கு இன்று திரிணாமுல் சத்ர பரிஷத் நிறுவன தினத்தை அர்ப்பணிக்கிறோம்.
மேலும், கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சகோதரியின் குடும்பத்தினருக்கும், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களுக்கு ஆளான அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்கள்.
மாணவர்கள், இளைஞர்கள் சமூகத்தில் பெரும் பங்கு வகிக்கின்றனர். சமுதாயத்தையும், கலாச்சாரத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும். இந்த புதிய நாளின் நல்ல எண்ணங்களை கொண்டு சுற்றியுள்ள அனைவருக்கும் ஊக்கமளிப்பது மாணவர் சமுதாயத்தின் பிரதான பணியாகும். இதுதான் இன்று அவர்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள். இந்த முயற்சியில் என்னுடன் உறுதியுடன் இருங்கள். என் அன்பான மாணவர்களே, நலமாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதியுடன் இருந்திடுங்கள். ” என மம்தா பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆர்.ஜி கர் மருத்துவமனையில் 31வயது பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை உண்டாக்கியது. 2 வாரங்கள் கடந்தும் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாத நிலை உள்ளதால், இன்று வரையில் கொல்கத்தா மற்றும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.