பிரதமரின் யாஸ் புயல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்த மம்தா பானர்ஜி..!
யாஸ் புயல் குறித்து பிரதமர் மோடி நேற்று மேற்கு வங்கத்தை ஆய்வு செய்தார். பிரதமரின் ஆய்வுக்கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார். இதனை அடுத்து மேற்கு வங்கத்தில் அதிரடியாக மாநில தலைமை செயலாளரை மத்திய அரசு பணியிடமாற்றம் செய்துள்ளது.
நேற்று யாஸ் புயல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களை மேற்பார்வையிட்டார். அப்போது புயல் குறித்த ஆய்வுகூட்டத்தில் பிரதமர் மற்றும் மேற்கு வங்க ஆளுநர் மட்டுமே வருகை புரிந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரை மணி நேர தாமதமாக வந்துள்ளார். மம்தா பானர்ஜி வந்தவுடன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கை ஒன்றை வழங்கிவிட்டு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்காமல் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்து மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க உறுப்பினர்கள் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அதிரடியாக மேற்கு வங்க தலைமை செயலாளர் அலபன் பண்டா பாத்யாயா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு பணிக்கு இவரை அழைத்துள்ளனர். மேலும், மேற்கு வங்க நிதித்துறை செயலாளர் திவேதி தற்காலிக தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலில் உள்ள காழ்ப்புணர்ச்சியால் புயல் பாதித்த இந்நேரங்களிலும் மம்தா மற்றும் பிரதமர் இடையே இருக்கும் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.