திடீர் மழை.. அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்.! காயமடைந்த மம்தா பானர்ஜிக்கு மருத்துவமனையில் சிகிச்சை.!

mamta banarjee

விமான பயணத்தில் பெய்த திடீர் மழை காரணமாக அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் இருந்து கிழே இறங்கும் போது மம்தா பேனர்ஜிக்கு காயம் ஏற்பட்டது. 

 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த திங்கள்கிழமை இரவு ஜல்பைகுரி மாவட்டத்தில் இருந்து ஹெலிகாப்டர்  மூலம் கிராந்தியை அடைந்தார். அதன் பிறகு நேற்று மதியம் 1.20 மணியளவில், அவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் பாக்டோக்ராவுக்குச் சென்றார். அங்கு வானில் மேக மூட்டம் இருந்தது ஆனால் கிராந்தியில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டபோது மழை அப்போது  பெய்யவில்லை.

அதன் பிறகு ஹெலிகாப்டர் பாக்டோக்ராவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது, சிலிகுரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. ஜல்பைகுரி மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மழை தீவிரமடைந்தது.

பைகுந்தபூர் வனப்பகுதிக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது, மழையின் காரணமாக ஹெலிகாப்டர் வழியே பார்க்கும் திறன் குறைந்தது. இதனால், விமானி பாதுகாப்புப் படைகளின் பணியாளர்களைத் தொடர்பு கொண்டு, சிலிகுரியின் வடமேற்கில் உள்ள பாக்டோக்ராவிற்கு பதிலாக வடகிழக்கே செவோக் நோக்கிச் சென்று அங்குள்ள ராணுவ நிலையத்தின் ஹெலிபேடில் அவசரமாக தரையிறங்கினர்.

அவசரமாக தரையிறங்கிய பிறகு, முதல்வர் மம்தா பேனர்ஜி ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்கியபோது தான் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டது. உடனே அவரது பாதுகாப்பு படையினர் வந்து கார் மூலம் ஏப்ரனுக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து அவர் ஒரு சிறப்பு விமானத்தில் கல்கத்தா சென்றார். மம்தா கல்கத்தா வந்த பிறகு, அவர் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது காயங்களைக் கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்யபட்டது.

மாலையில், மருத்துவமனையின் இயக்குனர் மணிமோய் பந்தோபாத்யாய், முதலமைச்சருக்கு இடது முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டுகளில் தசைநார் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறினார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தினர். இருப்பினும், வீட்டிலேயே தங்கி சிகிச்சையை தொடர்வதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அதன் பிறகு நேற்று இரவு 9 மணியளவில் வீட்டிற்கு கிளம்பினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்