“மரண தண்டனை வேண்டும்!” கொல்கத்தா பாலியல் வழக்கில் மம்தா கடும் அதிருப்தி!
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் அங்கு தன்னார்வலராக பணிபுரிந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
முதலில் கொல்கத்தா நகர போலீசார் விசாரணை செய்து வந்த இந்த வழக்கானது நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு சிபிஐ வசம் மாறியது. சிபிஐ வழக்கு விசாரணை தொடர்ந்து சஞ்சய் ராய் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. குற்றவாளி சஞ்சய் ராய்-க்கான தண்டனை விவரத்தை நேற்று கொல்கத்தா செல்டாக் செஷன் நீதிமன்ற நீதிபதி வழங்கினார்.
சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும் , இது அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்றும் நீதிபதி கருத்து கூறியுள்ளார். இந்த தண்டனை விவரங்கள் குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த தண்டனை குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியை பதிவு செய்துள்ளார். இந்த வழக்கை கொல்கத்தா போலிசார் மட்டுமே விசாரணை செய்திருந்தால் இந்நேரம் சஞ்சய் ராய்-க்கு மரண தண்டனை கிடைத்திருக்கும். நீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உச்சநீதின்றதில் மேல்முறையீடு செய்வோம் என மம்தா பானர்ஜி நேற்று கூறினார்.