பாஜக எனும் பூனைக்கு மணி கட்டுவது தான் எனக்கு முக்கியம் – மம்தா பானர்ஜி!
எதிர்க்கட்சிகள் இணையும் ஓரணியில் தலைவர் யாராக இருந்தாலும் எனக்கு சம்மதம் தான், ஆனால் பாஜக எனும் பூனைக்கு மணி கட்டுவது தான் எனக்கு முக்கியம் என கூறியுள்ளார்.
டெல்லியில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி டெல்லி பயணத்தின் முதல் நாள் செவ்வாய் கிழமை சில காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்தார். அதன் பின்பதாக மாலை 4 மணியளவில் மரியாதையின் நிமித்தமாக பிரதமர் மோடி அவர்களையும் சந்தித்தார்.
பின் நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் சந்தித்திருந்தார். அதன் பின்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜியிடம், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணையும் ஓரணியில் யார் தலைவர் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, சூழலை பொறுத்து தலைவர் நியமிக்க படுவார்கள் எனவும், யார் தலைவராக வந்தாலும் தனக்கு சம்மதம் தான், பாரதிய ஜனதா எனும் பூனைக்கு மணி கட்டுவது தான் தனக்கு முக்கியம் என கூறியுள்ளார். மேலும், பாஜக எண்ணிக்கை ரீதியாக பெரிதாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக பலமானதாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும், 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மோடிக்கும் நாட்டிற்கும் இடையில் நடைபெறும் தேர்தலாக இருக்கும் எனவும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்தால் வரலாறு உருவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.