இந்தியா அணியின் ‘ஜெர்சி’ நிறம்… மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி..!
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி நீலமாக இருந்தாலும், உலகக்கோப்பை பயிற்சி ஜெர்சியின் நிறம் மாற்றப்பட்டு தற்போது அதன் நிறம் காவி நிறமாக மாறியுள்ளது. இதனால் தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய அணியின் இந்த பயிற்சி ஜெர்சியை பாஜக காவி மயமாக்கியதாக குற்றம் சாட்டினார்.
நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு இந்திய கிரிக்கெட் அணி உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் காவி நிறமாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி ஜெர்சி இப்போது காவி நிறத்தில் உள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
கிரிக்கெட் அணியின் ஜெர்சிக்கு மட்டுமின்றி மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயிண்டிங்கிலும் பாஜக காவி நிறத்தை சேர்த்துள்ளது. நாடு முழுவதும் காவி வண்ணம் பூச பாஜக முயற்சிக்கின்றனர். எங்கள் இந்திய வீரர்களைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவர்கள் உலகக்கோப்பையில் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் பாஜக அங்கும் காவி நிறத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
இந்தியா நாட்டு மக்களுக்கு சொந்தமானது என்றும், ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல” என்றும் கூறினார். மம்தா பானர்ஜி கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.