அமைச்சர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குல் திட்டமிடப்பட்ட சதி – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!
மேற்குவங்க ரயில் நிலையத்தில் வைத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜாகிர் உசேன் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சதித்திட்டம் தீட்டி செய்யப்பட்டது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் நலத்துறை மந்திரி ஜாகிர் உசேன் அவர்கள் கொல்கத்தா செல்வதற்காக நிம்திதா ரயில் நிலையத்திற்கு சென்றார். அப்பொழுது சில மர்ம நபர்கள் திடீரென அவர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் பலத்த காயமடைந்த தொழில் நலத்துறை மந்திரி ஜாகிர் உசேன் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜாகிர் உசேன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மத்திய ரயில்வே மந்திரி பாஜக தேசிய பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜாகிர் உசேன் சிகிச்சை பெற்றுவரும் கொல்கத்தா மருத்துவமனைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் வழங்கியுள்ளார். அதன்பின் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் ஜாகிர் உசேனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜாகிர் உசேன் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சதித் திட்டம் நிறைந்தது எனவும், தாக்குதல் நடைபெற்ற போது ரயில் நிலையத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாமல் விளக்கு எரியாமல் இருந்துள்ளது. அசம்பாவிதம் நடைபெற்ற இடம் ரயில்வேக்கு சொந்தமானது. எனவே இதில் முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜாகிர் உசேன் பிரபலமான தலைவர் என்பதால் அவரை கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி இருக்கிறார்கள் என தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி விரைவில் உண்மை வெளிவரும் என நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். பின் அவரது இதயத்துடிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்தவர்களுக்கு 5 லட்சமும், சிறு காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.