இளைஞர்கள், மாணவர்களை கவரும் காங்கிரஸின் முக்கிய வாக்குறுதிகள்…
Congress : இளைஞர்களை கவரும் விதத்தில் பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தற்போது வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுக்க 543 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வேளைகளில் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே, தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து இருந்த நிலையில், இன்று விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை இதில் காணலாம்…
வேலைவாய்ப்பின்மையை போக்கும் வகையில், மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசு பணிகளில் 50 சதவீதம் வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்டும்.
21 வயதுக்கு கீழே உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்டும். டிப்ளமோ, டிகிரி முடித்து அப்ரன்டீஸ் பயிற்சி பெரும் இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி இலவசமாக்கப்படும். 2024 வரையில் வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து கல்வி கடன்களும் ரத்து செய்யப்படும். SC, ST, OBC மாணவர்களுக்கான ஏற்கனவே வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும். நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாநில அரசுடன் கலந்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு வேலைக்கு எடுக்கப்படும் நடைமுறை ரத்து செய்யப்பட்டு பழைய முறையில் நிரந்தரமாக பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தனது வாக்குறுதிகளில் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பா.சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.