மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 10,000-ஐ நெருங்குகிறது.!

இந்திய மாநிலங்களிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா தீவிரம் அதிகமாக உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000-ஐ நெருங்குகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 2 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் ஊரடங்கு நீட்டிப்பா? அல்லது தளர்வா? என்ற குழப்பம் மக்களிடையே நிலவ வருகிறது. இதில் ஒரு சில மாநிலங்கள் பாதிப்பு குறைவாக உள்ள பகுதியில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை இதுவரை 33,050 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1074 ஆகவும் உள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட 33,050 பேரில் 8,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்திய மாநிலங்களிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா தீவிரம் அதிகமாக உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000-ஐ நெருங்குகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9, 915 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 432 ஆகவும் இன்று காலை நிலவரப்படி அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை ஒரு பெரும் நகரமாக இருக்கின்றது. அங்கு பாதிப்பும் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மும்பையில் மட்டும் இதுவரை 6,644 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் தமிழர்கள் வாழும் தாராவி பகுதியும் அடங்கும். மும்பையைத் தொடர்ந்து புனேவில் 1,192 பேரும் தானேவில் 882 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் மரணங்களும் வேகமாக அதிகரித்து வரும் மாநிலம் குஜராத். இங்கு 4082 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 197 பேர் உயிரிழந்துள்ளனர்.