ஏக்நாத் ஷிண்டேவை நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரமில்லை.! மகாராஷ்டிரா சபாநாயகர் அறிவிப்பு.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. இதில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். இரண்டரை ஆண்டுகள் கடந்த இந்த ஆட்சியில், அடுத்ததாக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கிய தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனை அடுத்து உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது.
இந்த அரசியல் மாற்றத்தை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கொண்டு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினார். முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர பாட்னாவிஸ் பொறுப்பில் உள்ளார்.
ராகுல் காந்தி நடைப்பயணத்துக்கு மணிப்பூர் அனுமதி!!
இதனை அடுத்து உத்தவ் தாக்கரே தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடியது. தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை சிவசேனா கட்சியாக அறிவித்தது. சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை அந்த கட்சிக்கு ஒதுக்கியும் உத்தரவிட்டது. மேலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணிக்கு தீப்பந்தம் சின்னம் கொடுத்தது.
இதனை அடுத்து ஏக்நாத் ஷிண்டே உட்பட அவர் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் உத்தவ் தாக்கரே மனு அளித்திருந்தார். அதேபோல, ஷிண்டே தரப்பும் உத்தவ் தாக்கரே அணி ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை விடுத்து இருந்தது. இதில் 54 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சிக்கினர்.
இந்த தகுதிநீக்க புகாரில் உரிய உத்தரவை உடனடியாக வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு மனு அளித்து இருந்தது. இது குறித்து இறுதியாக முடிவு எடுக்க சபாநாயகருக்கு டிசம்பர் 31 வரை கெடு விதிக்கப்பட்டு வந்தது. அந்த கெடுவை, மேலும் 10 நாட்களுக்கு உச்சநீதிமன்றம் நீட்டித்தது.
ஜனவரி 10ஆம் தேதியான இன்று கெடு முடிய கடைசி நாள் என்பதால், இன்று சபாநாயகர் தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியானது, எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை நீக்கவும் , சட்டசபை கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்கவும் உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரமில்லை. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி தான் உண்மையான சிவசேனா என சபாநாயகர் தகுதிநீக்க விவகாரத்தில் தீர்ப்பு வழங்கினார். இது ஆளுங்கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு ஆதரவாகவும், உத்தவ் தாக்கரே அணிக்கு எதிராகவும் உள்ளது.