மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த பரபரப்பு ! தேசியவாத காங்கிரஸ் தலைவருடன் பாஜக எம்.பி.திடீர் சந்திப்பு
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டிற்கு பாஜக எம்.பி. சஞ்சய் காகடே சென்றுள்ளார்.
மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.திடீரென்று அங்கு அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ்,தேசிய வாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா பாஜக அரசை விமர்சனம் செய்து வருகின்றது.
குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்த அஜித் பவார் பாஜகவுடன் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பாஜகவிற்கு ஆதரவு அளித்த அஜித் பவரை சட்டப் பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டிற்கு பாஜக எம்.பி. சஞ்சய் காகடே சென்றுள்ளார்.அவர் சரத்பவார் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தில் பாஜக ஆட்சியமைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், திடீர் சந்திப்பால் சிவசேனா, காங்கிரஸ் கலக்கத்தில் உள்ளது .