#Breaking:பரபரப்பு…மகாராஷ்டிரா சட்டப்பேரவை;புதிய சபாநாயகர் யார்? – தொடங்கியது தேர்தல்!
மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார்.மேலும்,பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில்,முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏக்கள் கோவாவில் இருந்து மும்பைக்கு திரும்பியுள்ளார்கள்.இதற்கிடையில்,கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஏக்நாத் ஷிண்டேவை கட்சியில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில்,மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்பு கூட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.அதேசமயம், மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு சபாநாயகரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில்,தற்போது அப்பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு,சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேகரும்,அதே சமயம்,மகாவிகா அகாதி கூட்டணி சார்பில் சிவசேனாவின் ராஜன் சால்வி ஆகியோர் நேரிடையாக போட்டியிடும் நிலையில்,தற்போது வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
அதன்படி,முதலாவதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே,துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.இதனிடையே,மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு பெரும்பான்மையை பொருத்தமட்டில் 145 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே தேவையாக உள்ள நிலையில்,ஏற்கனவே பாஜகவுக்கு 161 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.இதனால், பாஜக சார்பில் போட்டியிடும் ராகுல் நர்வேகரும் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.