மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 920 பேர் உயிரிழப்பு!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 920 பேர் புதிதாக கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது தவிர குறைந்தபாடில்லை. தினமும் உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 920 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். எனவே இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 72,662 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு புதிதாக 57,640 ஏர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 57,006 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 3,282 கொரோனா தொற்று பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.